

சென்னை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவில் நிலம் கையகப்படுத்தும் சிறப்பு வட்டாட்சியராக பணியாற்றிய ஆர்.ரங்கராஜன் 2014-ல் மோசடி புகார் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், அவரை ஓய்வு பெறவும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்தும், தனக்கான ஓய்வூதியப் பணப் பலன் கோரியும் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019-ல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘துறை ரீதியிலான விசாரணை அல்லது குற்ற விசாரணையைக் காரணம் காட்டி ஓய்வூதிய பணப் பலன்களை நிறுத்தி வைக்க முடியாது’ என்று கூறி, அவருக்கான ஓய்வூதியப் பலன்களை 12 வாரங்களில் வழங்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் கடந்த 2023-ல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தமிழக வருவாய்த் துறை செயலர் வி.ராஜா ராமன், வருவாய் நிர்வாக ஆணையர் கே.பிரபாகர், கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோருக்கு எதிராக ரங்கராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆர்.சக்திவேல் அமர்வு, ‘மனுதாரருக்கு வரும் 17-ம் தேதிக்குள் பணப் பலன்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக வருவாய்த் துறை செயலர் ராஜாராமன் அன்று ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.