மறைந்த நீதியரசர் தமிழ்வாணன் புகழ் நீதித்துறை வரலாற்றில் நிலைத்திருக்கும்: வைகோ இரங்கல்

மறைந்த நீதியரசர் தமிழ்வாணன் புகழ் நீதித்துறை வரலாற்றில் நிலைத்திருக்கும்: வைகோ இரங்கல்

Published on

சென்னை: நிலைகுலையாத நேர்மையாளரான நீதியரசர் தமிழ்வாணன் புகழ் நீதித்துறை வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை உயர்நீதிமன்றத்தின் புகழ் மிக்க நீதியரசராக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் தமிழ்வாணன் மார்ச் 22ம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியை இன்றைய காலை ஏடுகள் மூலமாக அறிந்தேன். உடனே அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரது திரு உருவப் படத்திற்கு மாலை சூட்டி, மலர்களைத் தூவி விட்டு, அவரது துணைவியாரிடமும், அன்னாரது குடும்பத்தினரிடமும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையையும் தெரிவித்தேன்.

தேனி மாவட்டம், அம்பரப்பர் மலையில் இந்திய மத்திய அரசு நிறுவ திட்டமிட்டிருந்த தலைமை அமைச்சர் மோடி தனது கனவுத் திட்டம் என்று அறிவித்த நியூட்ரினோ அணு நச்சாலையை அங்கு நிர்மானிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தற்போது நினைவில் வாழும் நீதியரசர் தமிழ்வாணன் அவர்கள் அமர்வில் மூன்று மணி நேரம் ஆணித்தரமான ஆதாரங்களோடு என் வாதங்களை முன் வைத்தேன். நீதியரசர் தமிழ்வாணன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்திற்கு 2015ம் ஆண்டு மார்ச் 28ம் நாள் தடை ஆணை விதித்தார். அந்தத் தடை ஆணை இன்று வரை நிலுவையில் நீடிக்கிறது.

இந்த நியூட்ரினோ அபாயத்தை எதிர்த்துத்தான் மதுரையில் இருந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வழியாக நடைபயணமாகச் சென்று கம்பத்தில் நிறைவு செய்தேன். நடைபயணத்தை இன்றைய முதல்வர் ஸ்டாலின்தான் புலி, கயல், வில் இலச்சினை பொறித்த உரிமைக் கொடியை என் கரங்களில் தந்து தொடங்கி வைத்தார்.

நினைவில் வாழும் நீதியரசர் தமிழ்வாணனின் பெற்றோர் திராவிடர் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். தந்தை பெரியாரின் மீது எல்லையற்ற மரியாதை கொண்டு, பெரியார் நெறிப்படி வாழ்ந்தார். நிலைகுலையாத நேர்மையாளரான நீதியரசர் தமிழ்வாணன் புகழ் நீதித்துறை வரலாற்றில் நிலைத்திருக்கும்” என்று வைகோ கூறியுள்ளார்.

மறைந்த நீதியரசர் தமிழ்வாணன் புகழ் நீதித்துறை வரலாற்றில் நிலைத்திருக்கும்: வைகோ இரங்கல்
‘ஏஐ’யால் வழக்கறிஞராக முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in