

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டில் நேற்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள், பாபர் மசூதி தகர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநாட்டுக்கு நா.முத்துநிலவன் தலைமை வகித்தார்.
கருத்தரங்கதில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கி.சந்துரு பேசியது: அண்ணல் அம்பேத்கர் நினைவு தினமும், பாபர் மசூதி இடிப்பு தினமும் ஒரே தேதியில் நினைவு கொள்வது வருத்தத்தை தருகிறது.
அம்பேத்கர் இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பி என்று நாம் சொல்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியாக இருக்கக் கூடியவர் அந்த அரசியலமைப்பு சட்டத்தில் அடிநாதமாக மதச்சார்பின்மை என்ற கருத்தை வரையறுத்திருக்கிறார். தொடர்ச்சியாக அதைப்பற்றி பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.
அப்படி மதச்சார்பின்மையை நாம் தூக்கி பிடிக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு நேர் விரோதமாக மதச்சார் பின்மையை குலைப்பதற்காக ஒரு சக்தி இந்த நாட்டில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. அதனுடைய விளைவாக தான் 1992, டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதியை இடித்தார்கள்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரேநாளில் இருப்பதால், ஒரே ஒரு விஷயம் தான் இருக்கிறது. இந்த அரசியல் சட்டம், இந்த நாட்டில் தொடர்ந்து செயல் பட வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு சாராருக்கும், இந்த சட்டத்தை தவிர்த்துவிட்டு வேறு விதமான ஒரு ஆட்சியை நடத்த துணிபவர்களுக்கும் ஒரு கருத்து போராட்ட தினமாக தான் நாம் இதை நாம் பார்க்கிறோம்.
இன்றைக்கு இதை அரங்க கூட்டமாக நடத்துகிறோம், ஆனால், 1992 ம் ஆண்டுக்கு பிறகு, பாபர் மசூதியை இடித்த பிறகு, தமிழ்நாட்டில் எங்கேயுமே கூட்டம் நடத்த அனுமதிப்பதில்லை. அம்பேத்கர் நினைவை போற்றக்கூட அனுமதிக்காத ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வாரம் அம்மாநில கல்வித் துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, ஒவ்வொரு பள்ளிக்கூடமும் சவுரிய திவாஸ் என்ற வீர தினத்தை கொண்டாட வேண்டும் என கூறியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின்னர், அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறபட்டது.
இப்படி ஒவ்வொரு முறையும் நம்முடைய உணர்ச்சிகளை தூண்டிப் பார்க்க பாஜகவினர் முயற்சி செய்கிறார்கள், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.