ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.500 நோட்டுகளை வழங்கத் தடை: வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்

ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.500 நோட்டுகளை வழங்கத் தடை: வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்
Updated on
1 min read

சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கான ‘கவனிப்புகளுக்கு’ கடிவாளம் போட தேர்தல் ஆணையம் தயாராவதற்கு முன்னதாகவே முறையற்ற பணப் ’பட்டுவாடாக்களை’ கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகிவிட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், உரிய ஆவணங்கள் இல்லாமல் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்லவும் பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்கும். இதைக் கண்காணிக்க ஆங்காங்கே வாகன சோதனைகளும் நடக்கும். ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே, ரிசர்வ் வங்கி சத்தமில்லாமல் முறையற்ற பணப் பரிவர்த்தனைகளை முடிந்தவரை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

அதன்படி தற்போது வங்கிகளில் இருந்து கட்டுக் கட்டாக ரூ.500 நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அதனால் தற்போது எந்த வங்கிக் கிளையிலும் 500 ரூபாய் நோட்டுகளை பெருமளவுக்கு எடுக்க முடியவில்லை என்று சாமானியர்களே புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக வங்கி வட்டாரங்களில் விசாரித்தபோது, “ரூ.5 லட்சத்துக்கும் அதிமாக 500 ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளதால் அவ்வாறு மொத்தமாக ரூ.500 கட்டுகளை யாருக்கும் வழங்குவதில்லை.

ஏடிஎம்-களில் 500 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கே தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனினும் இது தொடர்பாக எழுத்துபூர்வமாக எந்த உத்தரவும் இதுவரை எங்களுக்கு வரவில்லை” என்று தெரிவித்தனர்.

அதேசமயம், 500 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க கட்டுப்பாடுகள் இருந்தாலும் 200, 100, 50, 20 ரூபாய் கட்டுகளை தாராளமாக வங்கி கிளைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பெருமளவு தொகையை 200, 100, 50, 20 ரூபாய் கட்டுகளாக எடுத்துச் செல்வதும், அதை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதும் கடினம் என்பதை உணர்ந்தே 500 ரூபாய் நோட்டுகளுக்கு மட்டும் ரிசர்வ் வங்கி கிடுக்குப்பிடி போட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க ரிசர்வ் வங்கி வழியாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை எந்தளவுக்குப் பலன் கொடுக்கும் எனத் தெரியவில்லை. எனென்றால், வாக்குக்குப் பணம் கொடுப்பதையும் அரசியல்வாதிகள் இப்போது ‘டிஜிட்டல் மயமாக்கி’ விட்டார்கள். எனவே, அதைத் தடுக்க என்ன வழி என்று தேர்தல் ஆணையம் இன்னும் கொஞ்சம் பெட்டராக யோசித்தால் நல்லது.

ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.500 நோட்டுகளை வழங்கத் தடை: வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தல்
இன்று சென்னை வருகிறார் கிரிஷ் சோடங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in