

கோவை: மருதமலை அருகே மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வனக்கோட்டம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்குட்பட்ட மருதமலை அடிவாரம் பகுதியில் நேற்று காணப்பட்ட சிறுத்தைக் குட்டி வனத்துறையினரால் மீட்கப்பட்டு இயற்கை கற்களால் கட்டப்பட்ட குகை போன்ற அமைப்பில் வைத்து தாயினுடன் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ”கண்காணிப்புப் பணி தொடர்ந்த நிலையில் இன்று காலை 5 மணியளவில் கருஞ்சிறுத்தை குட்டி குகையில் பார்த்தப்போது அங்கு குட்டி இல்லை. அதிகாலை சுமார் 1.45 மற்றும் 4.30 மணி அளவில் இரண்டு சிறுத்தைகள் சிறுத்தை குட்டி இருக்கும் குகையின் அருகே வந்து சென்றுள்ளன. அதைத் தொடர்ந்து காலை 4:30 மணியளவில் சிறுத்தை குட்டி குகையை விட்டு வெளியே சென்றது தெரியவந்தது.
இரண்டு குழுக்கள் வனப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுப்பட்டன. காலை 5.30 மணியளவில் இயற்கையாக அமைக்கப்பட்ட குகையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் படுத்த நிலையில் கருஞ்சிறுத்தைக் குட்டி கிடந்துள்ளது. தணிக்கை செய்த போது குட்டி இறந்துள்ளது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பின்பு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.