மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல் சாதிப் பெயரை நீக்குவதால் மாற்றம் ஏற்படாது: உயர் நீதிமன்றம்

மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல் சாதிப் பெயரை நீக்குவதால் மாற்றம் ஏற்படாது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப் பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவ.19-க்குள் முடிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே அரசாணையை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ‘மக்களின் மனதில்தான் பாகுபாடு இருக்கிறது. அதையே மாற்ற முயல வேண்டும். அதை விடுத்து தெருப் பெயர்களை மாற்றுவதால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர இயலாது’ என்றனர்.

அதற்கு அரசு தரப்பில், ‘மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் மனத்திலும் மாற்றம் வரும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை பிப்.11-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல் சாதிப் பெயரை நீக்குவதால் மாற்றம் ஏற்படாது: உயர் நீதிமன்றம்
தவெகவை குறைத்து மதிப்பிடுகிறதா திமுக, அதிமுக?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in