

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வந்த மேம்பாலப் பணி முடிந்துள்ளதால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று முதல் வழக்கமான கால அட்டவணைப் படி, மின்சார ரயில்கள் இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் இதற்கான பணிகள் தொடங்கியதால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், கடந்த பிப்.19-ம் தேதி முதல், 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 45 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
அதாவது, 204 ரயில் சேவைகளில் இருந்து 115 சேவைகளாக குறைக்கப்பட்டன. இதுதவிர, தற்காலிக கால அட்டவணை அமைத்து, 20 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நடைமேடை 10, 11-ல் ஏப்.5-ம் தேதியில் முடிக்க வேண்டிய மேம்பாலம் அமைக்கும் பணிகளை முன்கூட்டியே முடித்துள்ளதால், இன்று (3-ம் தேதி) முதல் வழக்கமான காலஅட்டவணைப் படி மின்சார ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில், 10, 11-வது நடைமேடையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் பிப். 19-ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (இன்று) முதல் வழக்கமான பழைய கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும். வார நாட்களில் 212 மின்சார ரயில் சேவைகளும், ஞாயிறுக்கிழமைகளில் 189 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படும் என்றனர்.