

வாணியம்பாடி நீதிமன்றத்தில் மஜக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த மஜக பிரமுகர் வசீம் அக்ரம். இவர், கடந்த 10-ம் தேதி மாலை அருகே உள்ள பள்ளிவாசலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது காரில் வந்த மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கொலையாளி களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை நடந்த இரவே காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் சோதனை சாவடியில் 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையில், கொலை யாளிகள் என கருதப்படும் கூலிப்படை கும்பலான செல்வகுமார், பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன் ஆகிய 6 பேரும் தஞ்சாவூர் ஜே.எம்-3 மாஜிஸ்திரேட் பாரதி முன்னி லையில் கடந்த 15-ம் தேதி சரணடைந்தனர். இதே வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் என்பவர் அன்றைய தினமே சிவகாசி ஜே.எம்-1 மாஜிஸ்திரேட் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் சரணடைந்தார்.
மஜக பிரமுகர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் 8 பேரை வாணியம்பாடி தனிப்படை காவ லர்கள் கைது செய்தனர். 7 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்து நீதிமன்ற காவலில் இருந்தனர். இதில், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த அகஸ்டின், செல்வ குமார் உள்ளிட்ட 6 பேரை வாணியம்பாடி நகர காவல் துறையினர் கைது செய்து வாணியம்பாடி நீதிமன்ற மாஜிஸ்திரேட் காளிமுத்துவேல் முன்னிலையில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் 15 நாள் காவலில் அடைத்தனர்.
இந்நிலையில், வசீம் அக்ரம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸை வாணியம்பாடி மாஜிஸ்திரேட் காளிமுத்துவேல் முன்னிலையில் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதின் பேரில் டீல் இம்தியாஸ் சேலம் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.