Published : 08 Sep 2023 06:02 AM
Last Updated : 08 Sep 2023 06:02 AM

ரூ.9 கோடியில் சமூகநல இயக்குநர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் ரூ.9.82 கோடியில் கட்டப்பட்டுள்ள சமூகநல இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை நேற்று முதல்வர்மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மகளிரின் கல்வி, சுகாதாரம், குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் சம உரிமைகளை உறுதிப்படுத்த சமூகநல இயக்ககம் செயல்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உறுதி செய்யும் தொட்டில் குழந்தை திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்,பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப்பெண் திட்டம், திருமண உதவித் திட்டங்கள், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் சமூகநல இயக்ககத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சமூகநல இயக்ககத்துக்கு சென்னை, காமராஜர் சாலையில் தரை மற்றும் 2 தளங்களுடன், 26,044 சதுர அடி பரப்பில் ரூ.9.82 கோடியில் கட்டப்பட்டுள்ள சமூகநல இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இக்கட்டிடத்தில் சுமார் 120 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரியும் வகையில் அலுவலகங்கள், 2 கூட்ட அரங்குகள், மின்தூக்கி வசதி உள்ளிட்டஅனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சமூகநலத் துறைசெயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூகநலத் துறை ஆணையர் வே.அமுதவல்லி, கூடுதல் இயக்குநர் ச.ப.கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x