

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரலில் வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வாசகர்கள் உங்கள் குரல் சேவையில் கூறியதாவது: பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் 10ஆயிரம், 12ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஆனால், இந்த ஆண்டு குரூப்-4 தேர்வில் முதலில் 3,935 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டு பின்னர் கூடுதலாக 727 இடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது மொத்த இடங்கள் 4,662 என்ற அளவில்தான் உள்ளது.
இந்த காலியிடங்களுக்கு 13 லட்சம் பேர் தேர்வெழுதினர். இத்தனை லட்சம் பேருக்கு இந்த குறைந்த காலியிடங்கள் எப்படி போதுமானதாக இருக்கும். அதுமட்டுமின்றி இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு குரூப்-4 தேர்வு மிகவும் கடினமாக இருந்தது.
அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால், ஏற்கெனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. நான்கு, ஐந்து ஊழியர்கள் பார்க்கக்கூடிய வேலைகளை ஒரே ஊழியர் பார்க்க வேண்டிய கட்டாயச்சூழல் ஏற்பட்டுள்ளது.
பணிச்சுமையை குறைக்கு்ம் வகையில் அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான போராட்டங்களும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.
படித்து முடித்துவிட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். எனவே, தற்போது நடத்தப்பட்டுள்ள குரூப்-4 தேர்வில் காலிப்பணியிடங்களை கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும்.
காலியிடங்களை 10 ஆயிரம் அளவுக்கு அதிகரித்தால் கட் ஆஃப் மதிப்பெண்ணில் விளிம்பு நிலையில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “குரூப்-4 தேர்வை பொருத்த வரையில், பல்வேறு அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுவது வரையிலும் புதிய காலிப்பணியிடங்களை சேர்க்கலாம். அந்த வகையில், குரூப்-4 தேர்வில் காலிப்பணியிடங்களின் இடங்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.