

‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை மக்களுக்கு காதுகுத்து விழா நடத்தி அவர்களின் காதில் மதுரை மல்லிகைப் பூவை சுற்றிச் சென்றுள்ளார். தேர்தலில் மக்கள், அவரது காதில் பூ சுற்றுவார்கள்’’ என்று எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகாயத்தில் கோட்டை கட்டி குரளி வித்தை காட்டி இருக்கிறார். கடந்த நான்கரை ஆண்டு காலம் மதுரை மக்களுக்கு என்னென்ன திட்டங்களை அவர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்?
தனது தந்தையார் பெயரில் நூலகம், ஏறுதழுவல் அரங்கம் கட்டியதை தவிர மதுரையின் முன்னேற்றத்திற்கான எந்தத் திட்டத்தையும் அவர் வழங்கவில்லை. இப்போது தேர்தல் நேரத்தில் அவர் மதுரை மக்கள் மீது அக்கறை காட்டுவது போல் நடித்துச் சென்றுள்ளார்.
மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கான திட்ட வரைவு விவரங்களை ஒழுங்காக அனுப்பாததாலேயே மத்திய அரசு திட்ட வரைவை திருப்பி அனுப்பியது. மதுரை, தூத்துக்குடி தொழில் வள சாலையை கே.பழனிசாமி கொண்டு வந்தார். அந்தத் திட்ட முன் வடிவத்தை கூட ஸ்டாலின் செய்ய மறுக்கிறார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டை முதன் முதலில் நடத்தி தொழில் துறையில் புதிய இலக்கணத்தை ஜெயலலிதா படைத்தார். இன்று ஸ்டாலின், மாவட்டம் தோறும் சென்று மூதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவேன் என்று அறிவிக்கிறார். ஆனாலும், அது ஆகாயத்தில் கோட்டை கட்டும் கதையாக உள்ளது.
தொடர்ந்து மக்களை ஏமாற்ற முதலமைச்சர் பல முயற்சிகள் செய்து வருகிறார். அதற்கு மதுரையும் விதிவிலக்கல்ல... ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் முதல்வர் திருநெல்வேலி அல்வா கொடுத்தார். தற்போது மதுரை மக்களுக்கு காது குத்து விழா நடத்தி, மதுரைக்கு புகழ்பெற்ற மல்லிகைப் பூவையே மதுரை மக்களின் காதில் சுற்றிச் சென்றுள்ளார்.
மதுரை மக்கள், வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரது காதில் பூ சுற்றுவார்கள். இந்தத் தேர்தலோடு மதுரைக்கு விடிவு காலம் பிறக்கும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.