

நாமக்கல்: அதிமுக கூட்டணியில் ராசிபுரம் (தனி) தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, அந்தத் தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்ற அதிமுகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது ராசிபுரம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சரோஜா, முன்னாள் துணை சபாநாயகர் தனபால் உள்ளிட்ட அதிமுகவினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
அதேவேளையில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2021-ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் ராசிபுரம் தொகுதியை அதிமுக 8 முறை தக்கவைத்துள்ளது. திமுக 6 முறையும், காங்கிரஸ் இரு முறையும் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக ஏற்கெனவே ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும் அதிமுக கூட்டணியில் முதல் முறையாக களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதில். முன்னாள் அமைச்சர் சரோஜா பெயர் இடம் பெறவில்லை. அதனால் இம்முறை அவர் தேர்தலில் களம் காண்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதேவேளையில், ராசிபுரம் தொகுதி இப்போது தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.