

இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக வேட்டைக்காரன் புதூரில் உள்ள அழுக்கு சாமி சித்தர் கோயிலில் வழிபாடு நடத்திய முதல்வர் ரங்கசாமி.
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரான முதல்வர் ரங்கசாமி, நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். அதன்பின், தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி சித்தர் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர். தனது ஆன்மிக குருவாக அப்பா பைத்தியம் சுவாமியை ஏற்று வழிபட்டு வருகிறார். சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி சமாதிக்கு ரங்கசாமி அடிக்கடி செல்வதுண்டு. அப்பா பைத்தியம் சுவாமிக்காக புதுச்சேரி கோரிமேட்டில் தனது வீட்டின் அருகே கோயில் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
அப்பா பைத்தியம் சுவாமியின் குருவான அழுக்கு சாமியையும் (அழுக்குச் சித்தர்) ரங்கசாமி மனமுருகி வழிபடுவதுண்டு. எந்த காரியத்தில் இறங்கினாலும் இந்த இருவரையும் வேண்டி, சிறப்பு வழிபாடு செய்வது ரங்கசாமியின் வழக்கம்.
அதன்படி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நடைபெற்ற சூழலில், நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்குச் சித்தர் கோயிலுக்கு சென்ற ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தின் விவரங்கள் அடங்கிய காகிதத்தை பூஜைப் பொருட்களுடன் வைத்து வழிபட்டார். தனது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற, சிறப்பு பூஜை நடத்தி வேண்டிக் கொண்டதாக முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.