

பி ஆர் பாண்டியன்| கோப்புப் படம்
திருநெல்வேலி: திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம் அடைந்ததாகவும், இதனால் திருநெல்வேலி மண்டலத்தில் பூகம்ப அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் மண்டல அளவிலான தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல தலைவர் கே.செல்லத்துரை தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கே.எம்.ராம கவுண்டர், நாமக்கல் கே. பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவினை முடக்கிவிட்டனர். இதனால் பாலுக்கு விலை கிடைக்கவில்லை.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை தீவிரமாக நடைபெறுகிறது. ஆறுகளில் மணல் சூறையாடப்படுகிறது. கனிமவளம் ஏற்றிச் செல்லும் லாரிகளில் அடிபட்டு பலரும் உயிரிழக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் விளைநிலங்கள், நீர் வழிப் பாதைகள், ஏரிகள் உள்ளிட்டவை அபகரிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தஞ்சாவூரில் முதல்வர் பேசும்போது, மத்திய அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகை ரத்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பேசியுள்ளார். மத்திய ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி செலவின கட்டுப்பாட்டு துறை செயலாளர், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை குறைக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்புகிறார். இது ஒரு மரபாக பின்பற்றப்படுகிற செயல்.
ஆனால், இதனை சுட்டிக்காட்டி நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்குவதை நிறுத்துவதற்கு, முன்கூட்டியே அச்சாரம் போடுவது போல் முதல்வருடைய பேச்சு அமைந்துள்ளது. திமுகவிற்கு வாக்களிப்பதை தற்கொலைக்கு சமம் என்ற அடிப்படையில் புறக்கணிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அருமராஜ் வரவேற்றார். திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஆபிரகாம் நன்றி கூறினார்.