

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள். படம்: எல்.பாலச்சந்தர்
ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர்.
ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்றங்களில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை கைதிகளாக 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 2018-ம் ஆண்டிலிருந்து 2026-ம் ஆண்டு வரை இலங்கை கடற்படையினரால் ஏராளமான விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 1-ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர்.