

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: பொய்யும், புரட்டையும் அரசியலாகக் கொண்டு அன்புமணி தலைமையிலான கூட்டம் நடந்து கொள்கிறது. பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே அக்கூட்டத்தை நீக்கி விட்டேன்.
பொய் பொய்யாக பேசுவது, ஏளனமாக பேசுவது, மனம் புண்படும்படி பேசுவது என்று என்னை மட்டுமல்ல, 26 ஆண்டுகளாக உழைத்த கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணியை வசைபாடுவதை தினமும் செய்து வருகின்றனர்.
என்னை அரசியலில் இருந்து ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்புமணி தலைமையிலான பொய்யர்கள் கூட்டம் எதை எதையோ பேசிக்கொண்டு செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் உள்ள சில அதிகாரிகளை அன்புமணி கூட்டம் வைத்துக்கொண்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மூலம் வழக்கு போடுவது என்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இரு முறை வந்த தீர்ப்புகளும் எனக்கு சாதகமாக இருக்கிறது.
பாமகவில் இருந்து நீக்கப்பட்டதால், அன்புமணி பொய்யாக பேசி மிகவும் குழம்பி போயிருக்கிறார். ஊடகத்தையும் குழப்பி, மக்களையும் ஏமாற்றுகிறார். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில், பாமகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தேர்தல் கூட்டணி குறித்து பேசி கொண்டிருக்கிறோம். விரைவில் முடிவு வெளியாகும். ‘அய்யா பாமக’ தொடங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து கேட்கிறீர்கள். இதற்கு, அடுத்த வாரம் பதில் அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.