தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
Updated on
1 min read

சென்னை: பாமக தலைவராக தன்னை அறிவிக்கும் வரை தமிழக தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த புதிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சிவில் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டுள்ளது.

பாமக கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக் காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்த அன்புமணி உரிமை கோர முடியாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தேர்தல் வழக்கை மூன்று வாரத்துக்குள் பதில் அளிக்க ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தேர்தல் ஆணையம் சூழ்ச்சியால் மாம்பழம் சின்னம் முடக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே பாமக தலைவர் தான் மட்டுமே என்பதை பதிவு செய்யும் வரை தமிழகம் மற்றும் புதுவை தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை பிரதிவாதியாக சேர்த்து இருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரித்து, இந்த விவகாரம் தொடர்பாக சிவில் கோர்ட் தான் முடிவு செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற மனுக்களால் நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
‘‘திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்குத் தேவை’’ - ஜெகத்ரட்சகன் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in