

சிறுமியிடம் நலம் விசாரிக்கும் டீன் சாந்தாராமன் உள்ளிட்ட மருத்துவர்கள்.
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது: கடலூரை சேர்ந்த ஏழை தம்பதியின் மகள் 14 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறும் பாதிப்பு இருந்து வந்தது.
பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், அந்த பிரச்சினை சரியாகவில்லை. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அந்த சிறுமி அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு நியூரோ ஜெனிக் ப்ளேடர் எனப்படும் சிறுநீர்ப் பை செயலிழப்பு பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். நரம்பு மண்டலங்களில் ஏற்படும் சேதத்தால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
நரம்புகளை முடுக்கி விடும் நியூரோ மாடுலேஷன் தெரபி சிகிச்சை தான் இதற்கு ஒரே தீர்வு ஆகும். இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்துவதை போன்று, நரம்புகளின் செயல்பாட்டை சீராக்க நியூரோ மாடுலேஷன் சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வேண்டும்.
இதற்கு அந்த தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோரிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சிறுமியிக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
15 ஆண்டுகள் செயல்படும்
தொடர்ந்து, ரூ.7.5 லட்சம் மதிப்பிலான மின் முடுக்கி உபகரணம் சிறுமியின் உடலில் பொருத்தப்பட்டது. 15 ஆண்டுகள் செயல்படும் அந்த கருவி மற்றும் அதற்கான சிகிச்சை செலவை அரசு ஏற்று கொண்டது.
தற்போது சிறுமி நலமுடன் உள்ளார். மகளை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.