

மதுரை: ‘தேமுதிக இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. தேமுதிகவெல்லாம் ஒரு கட்சியா? பெரிய கட்சியை பற்றி கேளுங்கள் என்று திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனையூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சிறப்புரையாற்றினார். அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, மதுரை மாவட்டம் மேலூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியதாவது: தற்போது போட்டி திமுகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையேதான். ஆர்.பி.உதயகுமார் தென் மாவட்ட அதிமுகவில் தன்னை பெரிய ஆளாக நினைக்கிறார்.
அவர் பெரிய ஆளாக இருக்கட்டும். ஆனால், ஒருவரை அழித்து பெரிய ஆளாகிவிடக் கூடாது. தான் வாழ பிறரை கெடுக்கக் கூடாது. மேலூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளோம். இந்த முறை மேலூரில் திமுகதான் போட்டியிடும். வேட்பாளரை தலைமை முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று சொல்லவில்லை. கூட்டணியில் வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
விஜயகாந்த் இருந்தபோது தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. இல்லை என்று நாம் சொல்ல முடியாது. தேமுதிக இரு கட்சிகளிடமும் கூட்டணி பேசக்கூடாது. இங்கேயும் பேசுவது, அங்கேயும் பேசுவது என்பது சரியாக வராது. விசுவாசமாக இருந்தால் ஒரு பக்கம்தான் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், தேமுதிகவை பற்றி கேட்டபோது, ‘தேமுதிகவெல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள்’ என்று கூறினார். அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘காங்கிரஸில் இருந்து கொண்டு சிலர் உயிரை வாங்குகிறார்கள்’ என்ற அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் அவர் தேமுதிகவை விமர்சித்து பேசியது, அக்கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.