மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை: மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம்

மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை: மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம்
Updated on
2 min read

மேட்டூர்: மேட்டூரில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்துவிழுந்து 3 வீடுகள் சேதமடைந்தன. மேலும், 2 சிறுமிகள் காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திம் தொடங்கிய நிலையில், சேலம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் தாக்கி வந்தது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் கோடையின் வெப்பம் சற்று குறைந்து காணப்பட்டது. தற்போது, அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில், இரவு திடீரென பலத்த காற்று வீசியது.

குறிப்பாக, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, ஆங்காகங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன, மின்கம்பங்களும் சேதமடந்தன. இதனால் இரவில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

மேட்டூரில் பெய்த கனமழையால் செக்கானூர் அடுத்த ஜெ.ஜெ. நகரில் மின்கம்பங்கள் சாய்ந்து வீடுகள் மீது விழுந்து சேதம் அடைந்தது. இதனையறிந்த மினவாரிய ஊழியர்கள் உடனடியாக மின்விநியோகத்தை துண்டித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதேபோல அப்பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து வீடுகள் மீது விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரகுபதி என்பவரின் குழந்தைகளான கிருஷ்க்கா(4), கிருஷ்தா (4) ஆகிய 2 சிறுமிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்கப்பட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், டிவி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேதம் அடைந்தன. இதனையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடுகள் மீது விழுந்த ராட்சத மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகள் சேதமடைந்த வீடுகள், பொருட்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, முதற்கட்டமாக 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சேதம் அடைந்த வீடுகளுக்கும் வீட்டிலிருந்த பொருட்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: எடப்பாடி 51, சங்ககிரி 46.2, மேட்டூர் 41, டேணிஷ்பேட்டை 23, கரியகோவில் அணை 20, ஓமலூர் 2, சேலம் மாநகரம் 1.3, ஆத்தூர் 1 என மொத்தமாக 185.50 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை: மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம்
மேகேதாட்டு அணையை முற்றுகையிட தஞ்சையில் இருந்து புறப்பட்ட தமிழக விவசாயிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in