

சென்னை: தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஓரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல, மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் நாளையும், மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் விழுப்புரத்தில் நாளை மறுநாளும் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச 24 செல்சியஸ் அளவில் இருக்கும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தேனி மாவட்டம் தேக்கடியில் 5 செ.மீ., கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 4 செ.மீ., கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, சின்னக்கல்லாறு, சின்கோனா, தென்காசி மாவட்டம் செங்கோட்டை, குண்டாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.