

சென்னை: தமிழகத்தில் நெல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 10) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 12-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் சின்னக்கல்லாரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.