

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.5) முதல் செப்.8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 7.6 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை சுமார் 0.9 கி.மீ உயரத்தில், தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.5) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
செப்.6 முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். செப்.9, 10 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் நாளை (செப்.5) முதல் செப்.8-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன் ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.5) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைப் பொழிவு:
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வடசிறுவளூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் தலா 6 செ.மீ, விழுப்புரம் அவலூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.