

கோப்புப் படம்
சென்னை: சென்னையில் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள பறக்கும் ரயில் வழித்தடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஜூலை இறுதிக்குள் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னையில் பறக்கும் ரயில் வழித்தடம் (எம்ஆர்டிஎஸ்) கடந்த 1997-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. கடற்கரை - வேளச்சேரி இடையே 19 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் சேவை இயங்கி வந்தது.
பிறகு, வேளச்சேரி - பரங்கிமலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு, இத்தடம் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பறக்கும் ரயில் தடத்தில் மொத்தம் 24 கி.மீ. தூரத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இதற்கிடையே, பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த திட்டத்துக்கு ரயில்வே வாரியம் கடந்த 2025 ஜூலை 31-ம் தேதி கொள்கை அளவில் முதல்கட்ட ஒப்புதலை வழங்கியது. ஆனால், அடுத்த கட்ட செயல்முறை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், பறக்கும் ரயில் தடத்தை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க, ரயில்வே வாரியம் 6 வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்கும் என்று கூறப்படுகிறது. ‘இதுகுறித்த கூட்டு முன்மொழிவு சமீபத்தில் வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இனி தாமதம் ஏதும் இருக்காது. ஜூலை இறுதிக்குள் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒப்புதல் கிடைத்த பிறகு, தெற்கு ரயில்வே - மாநில அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இது, நிர்வாகத்தை முழுமையாக கையகப்படுத்தவும், அடுத்தடுத்த மாதங்களில் உள்கட்டமைப்புகளில் படிப்படியான மாற்றங்களைச் செய்யவும் வழிவகுக்கும்.
இத்திட்டத்தின் மதிப்பீட்டு செலவு தற்போது சுமார் ரூ.4,500 கோடியாக உள்ள நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாகவே அதற்கான நிதியைத் திரட்டுவது குறித்து மாநில அரசு பல்வேறு வழிகளை பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணி 2 மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்த வழித்தடம் அடியோடு மாற்றப்பட உள்ளது’’ என்றனர்.