

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் ஏராளமான மக்கள் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை வாங்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகங்களில், சில பணிகளை விரைவாக முடித்துக் கொடுப்பதாகக் கூறி இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வசூலிப்பதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 14 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். சென்னையைப் பொறுத்தவரை பெரியமேட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் உட்பட சில இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கீதா தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பத்திரப்பதிவுக்காக வந்த மக்கள் மட்டும் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர்.
சோதனை நடைபெறுவதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, அங்கு பணிபுரியும் சார் பதிவாளர் அலுவலக அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தெற்கு மாடவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புபோலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அலுவலக ஊழியர்களின் செல்போன்களையும் பெற்று, கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மதுரை கருப்பாயூரணி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 79 ஆயிரத்து 700 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
கோவை மாவட்டம் வடவள்ளி மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இரு குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர். இதேபோல், திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் குன்னத்தூர் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 14 சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையால் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.18 லட்சத்து 96,415 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் ஜிபே பரிவர்தனைகள் மூலம் ரூ.20 லட்சத்து 2,615 என மொத்தம் ரூ.38 லட்சத்து 99,030 கண்டறியப்பட்டது.