

நீலகிரி கூடலூர் புனித தாமஸ் பள்ளியின் பொன்விழாவில் பழங்குடியினருடன் இணைந்து நடனமாடிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்.
கூடலூர்: மத்தியில் ஆள்பவர்களின் கொள்கையை ஏற்காத அனைத்து அமைப்புகள் மீதும் தாக்குதல் நடக்கிறது என கூடலூர் பள்ளி விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் புனித தாமஸ் பள்ளியின் பொன் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி பங்கேற்றார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் மைசூரில் இருந்து கூடலூர் வந்தார்.
அங்கு அவர் பழங்குடியினருடன் பொங்கல் வைத்து நடனமாடி மகிழ்ந்தார். அவருக்கு சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, "ஒருவருக்கொருவர் அன்பாகவும் மற்றவரை மதிக்கும் ஒரு இந்தியாவை உருவாக்க விரும்புகிறேன்.
நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள், சிறப்பாகச் செய்யுங்கள். நீங்கள் எதை விரும்பினாலும் அதில் சிறந்து விளங்குங்கள், உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் நடந்த கலந்துரையாடலின்போது அவர் பேசியது: அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் கல்வி முறை தேவை. பட்ஜெட்டில் கல்விக்கு போதுமானநிதி ஒதுக்கி சிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கி, வேலை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். நாடு வளர்ச்சி அடைய உற்பத்தியைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
சீனா உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகிறது. உள் நாட்டில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் இன்று நமது ஜனநாயக அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம், பல்வேறு நிறுவனங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் நாட்டை ஆள்பவர்கள் எடுத்துக்கொண்டனர். அவர்களது கொள்கையை ஏற்காத அனைத்து அமைப்புகள் மீதும் தாக்குதல் நடக்கிறது.
இந்தியாவில் பல மதங்கள், பலவிதமான கலாச்சாரங்கள், பலவிதமான மொழிகள் உள்ளன. வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. ஒரு மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு, அவர்கள் பேசும் மொழி உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ அல்லது ஒருமதத்தை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவோ ஒருவரைத் தாக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை.
நீதிமன்றங்களின் கருத்து மற்றும் அவற்றின் அதிகார வரம்புபற்றி நான் பேச விரும்பவில்லை ஆனால், வளர்ச்சிக்காக நமது சுற்றுச்சூழலைத் தியாகம் செய்யக்கூடாது என்பது மிகவும் முக்கியம். ஆரவல்லி மலைத் தொடர் போன்ற விஷயங்கள் முற்றிலும் பொறுப்பற்ற செயல். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் வளர்ச்சி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் தமிழில் ‘அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என வாழ்த்துகளை பகிர்ந்தார். விழாவில், நீலகிரி எம்.பி.ஆ.ராசா, அருட்தந்தை மேத்யூஸ் மார்க் மாக்காரியாஸ் எபிஸ்கோப், பள்ளித் தாளாளர் ஜோபி குருத்து கலந்து கொண்டனர். முன்னதாக, ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.