

அமைச்சர் ரகுபதி
திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டப்பேரவைக்குள் வர முடியும் என காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி என்பது இடியாப்பச் சிக்கல் போன்றது. அதில், யார் பெரியவர் என்பது இதுவரை தெரியவில்லை.
எனவே, அந்தக் கூட்டணியையும், திமுக கூட்டணியையும் ஒப்பிட்டுப் பேச முடியாது. திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டப்பேரவைக்குள் வர முடியும், அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். விரைவில் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படும். எங்கள் தலைவர் சரியான பாதையில்தான் கூட்டணியை அழைத்துச் செல்வார்.
தமிழக மக்களிடம் பணம் கொடுத்தெல்லாம் வாக்குகளைப் பெற முடியாது. சாதனைகளைச் செய்து, அவற்றைச் சொல்லித்தான் வாக்கு சேகரிக்க முடியும். பல தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழக்கப் போகிறது. தற்போது திமுக மகளிரணியினர் வீடுவீடாக வாக்கு சேகரிக்கும் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஒவ்வொரு வீட்டு வாசலையும் தொட்டுவிட்டு வந்திருப்பது இந்திய வரலாற்றிலேயே இல்லாதது.
திமுகவை நம்பி வருவோரை தலைமை அரவணைக்கிறது. யாருக்கு எந்தப் பதவியைத் தருவது என்பது திமுக தலைமைக்குத் தெரியும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பற்றி கேள்வி எழுப்புவோர், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்குச் சென்று பார்த்து வந்து சொல்லலாம். இந்தத் தேர்தலில் சவால் எதுவும் இருப்பதைப் போல கண்ணுக்குத் தெரியவில்லை என்று அகம்பாவமாகச் சொல்ல மாட்டோம். திமுக எது வந்தாலும் சமாளிக்கும் திறன் படைத்த இயக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.