

சென்னை: காயிதே மில்லத் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில்உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத் 131-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கேரள தொழில் துறை அமைச்சர் பி.கே.குன்ஞாலி குட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சி்த் தலைவர் உதயநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கோகுல இந்திரா, எஸ்.அப்துல் ரஹீம், ரமணா.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோரும் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
| படம்:எஸ்.சத்தியசீலன் |
திமுக - காங்கிரஸ் மோதல்
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், அங்கு ஏராளமான திமுகவினர் திரண்டிருந்தனர்.
ஸ்டாலின் வருவதற்கு முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது ஆதரவாளர்களுடன் நினைவிடத்துக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த திமுகவினர், ‘எங்கள் தலைவர் மரியாதை செலுத்திய பிறகுதான் மற்ற தலைவர்கள் உள்ளே செல்ல வேண்டும்’ என கூறி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியினரை உள்ளே விட மறுத்து தடுத்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த திமுகவினர், ‘எங்கள் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு, இப்போது துரோகம் செய்கிறீர்கள்’ என்று காங்கிரஸ் கட்சியினரை நோக்கி முழக்கமிட்டனர்.
இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவிய போதிலும், செல்வப்பெருந்தகை அமைதியாகக் காத்திருந்தார்.
மு.க.ஸ்டாலின் வந்து மரியாதை செலுத்தி சென்ற பிறகு, செல்வப்பெருந்தகை தனது ஆதரவாளர்களுடன் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.