

வைத்திலிங்கம் எம்.பி
புதுச்சேரி: மாநில அந்தஸ்து கோரி தேர்தலை புறக்கணிப்பதாக முதல்வர் ரங்கசாமி முதலில் அறிவித்தால், அவருக்கு ஆதரவாக காங்கிரஸும் தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
இது தொடர்பக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் இரட்டை இன்ஜின் ஆட்சியில் எந்தவிதமான சாதனையும் படைக்கவில்லை என்பதால், பிரதமர் மோடி அதுகுறித்து ஏதும் பேசவில்லை. அரசு விழா என்றால் தமிழ் தாய் வாழ்த்து, தேசியகீதம் பாடப்பட்டிருக்க வேண்டும். இரண்டு நிகழ்வுகளும் விழாவில் இல்லை. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மோடி வந்தாரா? அல்லது தனது கட்சியின் விளம்பரத்துக்காக வந்தாரா? என்ற கேள்வி உள்ளது.
மாநில அந்தஸ்து தேவை என புதுவை மக்களிடம் ஒருமித்த கருத்து உள்ளது. அந்த ஒருமித்த கருத்தை கூறாமல், தன்னுடைய கருத்தை கூறியதால், அந்த இடத்தில் முதல்வர் தவறு செய்து விட்டார் என்றுதான் கூற வேண்டும். முதல்வரின் கோரிக்கைக்கு பிரதமர் செவிமடிக்காமல், தான் என்ன நினைத்தாரோ அதை மட்டுமே பேசிவிட்டு சென்றுள்ளார்.
மாநில அந்தஸ்துக்காக நாங்கள் தேர்தலை புறக்கணிக்க தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கூறியிருந்தார். தேர்தலை புறக்கணிப்பதாக முதல்வர் ரங்கசாமி முதலில் அறிவித்தால், அவருக்கு ஆதரவாக நாங்களும் தேர்தலை புறக்கணிக்க தயாராக உள்ளோம். நாங்கள் முதல்வருடன் நிற்போம். ஆனால், அவர் அறிவிப்பாரா என்பதுதான் கேள்வி. ஏனென்றால், முதல்வர் ரங்கசாமி முழுமையாக பாஜகவிடம் சரண்டர் ஆகி இருக்கிறார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக இருந்தது கிரண்பேடிதான் என்பது பிரதமர் மோடிக்கு தெரியும். அவர் தான் இந்த வேகத்தடையை உருவாக்கினார். 5 ஆண்டுகளாக என்டிஏ கூட்டணி ஆட்சிதான் இருக்கிறது. பிரதமர் கூறிய ஏடிஎம் மெஷினை கண்டுபிடித்திருக்க வேண்டும். ஏன் கண்டுபிடிக்கவில்லை.
தற்போது மருந்து ஊழல், நிலமோசடி ஊழல், பொதுப்பணித்துறையில் ஊழல் என அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது எந்த ஏடிஎமில் வருகிறது. இது பாஜக ஏடிஎம்மா அல்லது மோடி ஏடிஎம்மா? எங்கள் ஆட்சியில் தவறுகள் நடந்திருந்தால், இவ்வளவு காலம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் மோடி இருந்தார்?
புதுச்சேரியில் இதுவரை திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கட்சி தலைமை கூறினால் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று அவர் தெரிவித்தார்.