

தேர்தல் தொடர்பாக நடைபெற்ற புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டோர்.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ‘புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு கூட்டணி' என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இதுகுறித்த ஆலோசனை கூட்டம் புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி - தமிழ்நாடு, அகில இந்திய மக்கள் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் தேர்தலில் இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன், கூட்டாக இணைந்து தேர்தலைச் சந்திக்க அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளன. கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சாமி சண்முக சுந்தரம், சுத்தம் சுந்தர்ராஜன், ராம் பிரதாப் நரேந்திரன், ஜெயராஜன் மற்றும் ஆர்எம்பிஐ சார்பில் பிரவீன், ரவிசங்கர், கார்த்திகேயன், மேத்யூ, ஆரோக்கியராஜ் ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
அதேபோல், அகில இந்திய மக்கள் கழகத்தின் பாவாடை ராஜா, அருணாச்சலம், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் ஆசிர்வாதம், ஜேக்கப் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம். முகமது உமர் பாரூக் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக பங்கேற்றோர் கூறுகையில், "மக்களுக் காக களத்தில் நிற்கும் சமூக போராளிகள் ஏன் தனித்து நிற்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்து ஒரு கூட்டணியாக தேர்தலை சந்திக்கிறோம்.
பல்வேறு சமூக இயக்கங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, புதுச்சேரி மக்களுக்காகத் தொடர்ந்து போராடும் உண்மையான போராளிகளை தேர்வு செய்து போட்டியிட வைப்போம்" என்றனர்.