

புதுவை காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை டிஜிபி சாலினி சிங்கிடம் வழங்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. படம்:எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: கடந்த கால காங்கிரஸ் அரசைவிட புதுச்சேரிக்கு நான்கு மடங்குக்கும் அதிகமன நிதியை கடந்த 13 ஆண்டுகளில் மத்திய அரசு பாஜக வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
தமிழகம், புதுவைக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுவை வந்த அவர், ஆளுநர் மாளிகையில் இரவு தங்கினார்.
பின்னர் நேற்று காலை கோரிமேடு காவலர் மைதானத்தில் நடந்த விழாவில் புதுவை காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை வழங்கி பேசினார். விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவகொழுந்து,ராஜசேகர் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில் அமித் ஷா பேசியதாவது: புதுவை மாநிலத்தில் காவல் துறை சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அளித்து வருகிறது. குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது பெருமை தரக்கூடியது. புதுவை காவல் துறையில் 5 ஆயிரம் பேர் மட்டுமே இருந்தாலும், மண்ணின் ஆன்மிகம், பாரம்பரியம், மரபு ஆகியவற்றுடன் சட்டம் ஒழுங்கும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
யூனியன் பிரதேசங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை. இதன் ஒரு பகுதியாக புதுவையில் ரூ.2,500 கோடியில் சாலை விரிவாக்க திட்டம், ரூ.2,200 கோடியில் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், புதுவை விமான நிலையம் 34 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1950 முதல் 2014 வரை புதுவைக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 முதல் 2026 வரை பிரதமர் மோடி அரசு, ரூ.13,762 கோடி வழங்கியுள்ளது. 12 ஆண்டுகளில் 4 மடங்கு நிதியை பிரதமர் மோடி அரசு புதுவைக்கு வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும்
ரூ.39 ஆயிரம் கோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 7.7 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமர் மோடி அரசு உங்களின் தோளோடு தோள் நின்று புதுவை மாநில வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு பேசினார்.
தேசியக்கொடி ஊர்வலம்: இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவை ராஜீவ்காந்தி சிலை அருகே தேசியக்கொடி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடங்கி வைக்க வந்த அமித் ஷாவிடம் காவி நிறத்திலான கொடியை பாஜக நிர்வாகிகள் கொடுத்தனர். இதை ஏற்க மறுத்த அவர், “தேசியக்கொடிதான் வேண்டும்” என்றார். இதையடுத்து தேசியக்கொடியை கொடுத்த பிறகே ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநிலத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பிறகு அமித் ஷா டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
விழாவில் மயங்கி விழுந்த போலீஸார்: புதுவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்வில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு வரவழைக்கப்பட்டனர். விழா முடியும் வரை அதாவது 10 மணி வரை அவர்கள் வெயிலில் நிற்க வைக்கப்பட்டனர்.
விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்து விருதுகள் வழங்கும் வரை அவர்கள் தொடர்ச்சியாக 4 மணி நேரம் கடும் வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் மைதானத்தில் நின்றிருந்த ஆண், பெண் போலீஸார் பலர் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் முதலுதவிக்கு சக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். புதுவை காவல் துறைக்கு விருது வழங்கும் விழாவில் காவலர்கள் மயங்கி விழுந்த நிகழ்வால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.