தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

படங்கள்: எம் சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரி: தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டதால் பேருந்து நிலையத்தில், பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்ற அமீனா காத்திருந்தார்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்தவர் ஸ்டாலின் (35), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் 2023-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் திருபுவனை சென்று கொண்டிருந்தார். அப்போது தமிழக அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஸ்டாலின், தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 14.4.2025-ல் புதுவை தலைமை நீதிபதி ஆனந்த், ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தமிழக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் இந்த நஷ்ட ஈட்டை வழங்கவில்லை. இதையடுத்து ஸ்டாலின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ததால், தமிழக அரசின் 8 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல வில்லியனுாரை சேரந்த கொத்தனார் சுரேஷ், 2017-ம் ஆண்டு தமிழக அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்தில் இறந்தார். இது தொடர்பான வழக்கில் 2020-ல் குடும்பத்தினருக்கு ரூ.22 லட்சம் நஷ்டஈடு வழங்க ஜேஎம்.2 நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இந்த நஷ்ட ஈட்டையும் தமிழக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் தரவில்லை.

இதையடுத்து மேல்முறையீடு செய்ததால், இந்த வழக்கில் 6 பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில், இன்று நீதிமன்ற அமீனா அம்பி தலைமையில் நீதிமன்ற ஊழியர்கள் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தமிழக அரசு விழுப்புரம் கோட்ட பேருந்துகளை ஜப்தி செய்ய வந்தனர். ஒரு பேருந்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினர். மேலும் 13 பேருந்துகளுக்காக அவர்கள் காத்திருந்தனர்.

தமிழக அரசின் 14 பேருந்துகளை ஜப்தி செய்ய புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு
“விவசாய விரோதி விஜய் ஆட்சியால் டெல்டாவில் சோகம்” - ஸ்டாலின் காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in