

ஒரு வழியாக தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டாலும் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் இரண்டு கட்சிகளுக்கும் மத்தியில் இன்னும் இணக்கமான சூழல் ஏற்படவில்லை. இதையடுத்து, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு தங்களுக்கான பங்கீட்டை திமுக-விடம் பேசி பெற்றுத்தர வலியுறுத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் இம்முறை காங்கிரஸும் திமுக-வும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. கூட்டணிக்கு யார் தலைமை என்பதிலும் இப்போது விவாதம் எழுந்திருக்கிறது. இதையடுத்தே பஞ்சாயத்தை டெல்லிக்கு கொண்டு போயிருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
இதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாரத்தைக்கு அழைத்தும் திமுக மவுனம் காக்கிறது. கடந்த தேர்தலில் திமுக-வுக்கு கொடுத்த எண்ணிக்கையில் இம்முறை தொகுதிகளை வழங்க முடியாது 2016-ல் திமுக-வுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அதையே இப்போதும் ஒதுக்க வேண்டும். இதற்கு திமுக தரப்பில் சம்மதிக்காவிட்டால் இரண்டு கட்சிகளுமே தனித்துப் போட்டியிட்டு தங்களின் பலத்தை நிரூபித்துவிட்டு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்ற கருத்தையும் டெல்லி தலைமைக்கு வலியுறுத்தி இருக்கிறோம்” என்றனர்.
இதுவரை தமிழகத்தில் அமைந்த காங்கிரஸ் - திமுக கூட்டணியே புதுவையிலும் பெரும்பாலும் தொடர்ந்து வந்துள்ளது. 2001-ல், தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்தன. ஆனால் புதுச்சேரியில், காங்கிரஸ் ஒரு அணியாகவும் பாமக, அதிமுக ஒரு அணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
அப்படியான சிக்கல் இம்முறை ஏற்பட்டால் இண்டியா கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களும், விசிக-வும் திமுக-வுடன் தனி அணியை உருவாக்கலாம். புதிதாக வந்திருக்கும் சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் தனி அணி அமைக்கும். ஆனால், மிகவும் சிக்கலான நிலை நீடித்த தமிழகத்திலேயே ஒரு தீர்வை எட்டிவிட்ட திமுக, காங்கிரஸ் தலைமைகள் புதுச்சேரி விவகாரத்தை அந்தளவுக்கு கைமீறிப் போகவிட்டுவிடமாட்டார்கள் என்கிறார்கள்.
இதனிடையே, தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள், “காங்கிரஸ் இம்முறை கட்டாயம் 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருப்பதுடன், திமுக இன்னமும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடிப்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து, “தமிழகத்தில் திமுக சொன்னதை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதேபோல் புதுச்சேரிக்கும் நாம் சொல்வதை நிச்சயம் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இது தொடர்பாக திமுக தலைமையிடம் நாங்களே பேசுகிறோம்” என்று புதுச்சேரி காங்கிரஸாரை டெல்லி தலைமை சமாதானப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.