

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் முடிந்தது. மனு தாக்கல் முடிந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு இண்டியா கூட்டணியில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி காங்கிரஸூக்கு 16, திமுக மற்றும் கூட்டணிக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டன. திமுக பெறும் 14-ல் இருந்து விசிக, இந்திய கம்யூனிஸ்டுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
16 தொகுதிகளை பெற்றிருக்கும் காங்கிரஸ், திமுக போட்டியிட இருக்கும் 4 தொகுதிகளிலும் கூடுதலாக மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திமுக தாங்கள் பெற்ற 13 தொகுதிகளுக்கு மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளது. வேட்பு மனுத் தாக்கலுக்குப் பிறகான ஒப்பந்தத்தின்படி காங்கிரஸ் மனுதாக்கல் செய்துள்ள 4 தொகுதிகளில் வாபஸ் பெற வேண்டிய சூழல் உள்ளது.
இதேபோல் தட்டாஞ்சாவடி (காங்கிரஸ் வைத்திலிங்கம்-இந்திய கம்யூனிஸ்ட் சலீம்), உழவர்கரை (காங்கிரஸ் சிவசங்கரன் - விசிக செல்வபுஷ்பலதா) தொகுதிகளில் ஒரே கூட்டணிக்குள் 2 மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி உடன்படிக்கையைத் தாண்டி, கூடுதலாக தாக்கல் செய்துள்ள மனுக்களை காங்கிரஸ் வாபஸ் பெறாவிட்டால் ‘இண்டியா கூட்டணி’ என்று அறிவிக்கப்பட்டது புதுச்சேரியில் பெயரளவிலேயே இருக்கும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க திமுக, காங்கிரஸ் தலைமை குறிப்பிட்ட தொகுதிகளில் ஒப்பந்தத்தின் படியான வேட்பாளர்கள் தொடர, மற்ற வேட்பாளர்களின் மனுவை வாபஸ் பெற அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே ‘உழவர்கரையில் விசிக போட்டியிடும்’ என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்களுக்கான 14 தொகுதிகளில் ஒன்றை விசிகவுக்கு தருவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை என 3 தொகுதிகளில் நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். மற்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூ. தனியாக 4 தொகுதிகளில் போட்டி: இந்தச் சூழலுக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறி விட்டது. அக்கட்சி தனியாக போட்டியிட திட்டமிட்டு லாஸ்பேட்டை, திருபுவனை, முத்தியால்பேட்டை, உழவர்கரைஆகிய தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளது.