

படம்: எல்.சீனிவாசன்
கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டூர்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பக்கிங்காம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் வசித்துவந்த நூற்றுக்கணக்கான எளிய மக்களின் வீடுகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த திமுக அரசு சார்பில் ரூ.307 கோடி மதிப்பீட்டில் சுமார் 1,800 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு. வீடுகள் ஒதுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த குடியிருப்பில் 195 வீடுகள் காலியாக உள்ளன.
இந்த வீடுகளைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இடிந்து விழும் நிலையில் உள்ள தங்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு, காலியாக உள்ள புதிய குடியிருப்புகளில் தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "முந்தைய அரசில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் தற்போது அதிகாரிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட வில்லை என கூறுகின்றனர்.
இப்போதுள்ள அமைச்சரிடம் கேட்டாலும் முறையான பதில் இல்லை. பல குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றன. தற்போது, நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து, சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி, இப்பகுதியில் பாதாளச் சாக்கடை வசதி மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற அடிப்படைத் தேவைகளும் முற்றிலும் சீர்குலைந்துள்ளன" எனக் கூறினர்.
சாலை மறியல் குறித்த தகவல் அறிந்ததும், போலீஸார் மற்றும் நகர்ப்புற வாழ் விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எங்களுக்கு எழுத்துப்பூர்வமான ஒதுக்கீட்டு ஆணை கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பிடிவாதமாக மக்கள் சாலை யில் அமர்ந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றபோது, போலீஸாருக்கும் மக் களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக 5 கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண் டிய அமைச்சரும், எம்எல்ஏவும் வராமல் காவல் துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்காகும்" என்றார்.