

மதுரை: அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும், பரிந்துரைகள் அல்லது பிற புறக் காரணிகளின் அடிப்படையில் நடைபெறக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலூர் அருகே கீரனூர் கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டதற்காக முத்துராஜா என்பவரை தாக்கியதாக சின்னத்துரை, மகாராஜன் உள்ளிட்டோரை மேலூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவரின் ஜாமீன் மனுவை மதுரை வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி இருவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களின் மேல்முறையீடு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது நீதித்துறை ஒழுங்குமுறை தொடர்பான சிக்கலை எழுப்பியுள்ளது. ஜாமீன் விவகாரங்களில் உயர் நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான அதிகார வரம்பைக் கொண்டுள்ளதால், உயர் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு குறித்த கேள்வி எழவில்லை.
அதே நேரத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்த குற்றவியல் மேல்முறையீடுகளை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்ற நிலையில், அதே நபர்கள் தாக்கல் செய்த புதிய ஜாமீன் மனுக்களை அமர்வு நீதிமன்றம் பரிசீலித்தது சிக்கலானது ஆகும்.
ஒரு விவகாரம் உயர் நீதிமன்ற பரிசீலனையில் இருக்கும் போது, அதே விஷயத்தை விசாரணை நீதிமன்றம் பரிசீலிப்பதை தவிர்க்க வேண்டும். முரண்பட்ட தீர்ப்புகள் வெளியாவதையும், நீதியைச் சீராக நிர்வகிப்பதை உறுதி செய்யவும் இது அவசியமாகும். நீதிமன்றங்களுக்கான ஒரே மாதிரியான அதிகார வரம்பு என்பது அந்த அதிகாரத்தை நீதித்துறை ஒழுங்குமுறையை மீறும் வகையில் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதைக் குறிக்காது.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய போது ஏற்கெனவே ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்த மனுக்கள் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது. இதனை மனுதாரர் தரப்பு வழக்கறிஞரோ அல்லது அரசுத் தரப்பு வழக்கறிஞரோ விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை.
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் அலுவலர் ஆவர். முக்கிய உண்மைகளை மறைக்காமல் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் நடவடிக்கை முறையற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்காகவோ அல்லது மனுவை எதிர்ப்பதற்காகவோ மட்டும் நியமிக்கப்பட்டவர் அல்ல. நீதிமன்றத்தின் ஓர் அலுவலராகவும், அரசின் பிரதிநிதியாகவும் உள்ளார்.
குற்றவியல் நீதி நிர்வாகத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவது அவரது கடமையாகும். நீதிமன்ற பரிசீலனையில் உள்ள விவகாரம் தொடர்பான அனைத்து முக்கிய உண்மைகளையும் நீதிமன்றத்தின் முன் தெரிவிக்க வேண்டியது அவரது கடமையாகும். திறமையான அரசு வழக்கறிஞர் நியமனம் செய்வதை உறுதி செய்ய வேண்டியதற்கு எடுத்துக்காட்டான வழக்கு இது. அரசு வழக்கறிஞர் விசாரணை அமைப்பிற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறார்.
ஊழல், பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் நிலம், வருவாய், பொது வேலைவாய்ப்பு, கல்வி, வரிவிதிப்பு, பொதுக் கொள்கை மற்றும் பிற பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பான அரசு நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்குகள் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களிலும் அவர்கள் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவ்வழக்குகளில் நீதிமன்றத்திற்குத் திறம்பட உதவிகள் வழங்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் நலன்கள் மட்டுமல்லாமல், பரந்த பொது மற்றும் சமூக நலன்களும் பாதிக்கப்படுகின்றன. இறுதியில், நீதி நிர்வாகமே பலவீனமடைகிறது.
இதை கருத்தில் கொண்டு திறமையான அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதையும், நீதிமன்றத்திற்குத் திறம்பட உதவக்கூடிய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இது வெறும் காகித அளவில் சம்பிரதாயங்களாக மட்டும் இருக்கக்கூடாது.
அரசு வழக்கறிஞர் நியமனம் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்வு செயல்முறை அடிப்படையில் நடந்தால் மட்டுமே நம்பிக்கை ஏற்படும். பயனுள்ள சட்ட உதவி கிடைப்பதையும் உறுதி செய்யும். தற்போது சிறந்த சட்ட அறிவு, வலுவான வாதத் திறன் மற்றும் குறைபாடற்ற தொழில்முறைத் தரநிலைகளைக் கொண்ட பல வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்களில் இளம் வழக்கறிஞர்களும் உள்ளனர். இவர்களின் தகுதிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும். பரிந்துரைகள் அல்லது பிற புறக் காரணிகளின் அடிப்படையில் நடைபெறக்கூடாது. அப்படி நடந்தால் மட்டுமே குற்றவியல் நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க முடியும். மனுதாரர்கள் ஏற்கெனவே ஜாமீன் பெற்றுள்ளதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.