

சென்னை: ரேஷன் கடைகள், கிடங்குகளை தணிக்கை செய்வதற்காக பொது விநியோகத் திட்ட செல்போன் ஆய்வு செயலியை அமைச்சர் ப.வெங்கடரமணன் தொடங்கி வைத்தார்.
பொதுவிநியோக திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதற்கு உணவுத்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், கூட்டுறவுத் துறை செயலர் பெ.அமுதா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்ட துணைப்பதிவாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய ரேஷன் குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களுக்கு தீர்வு காணுதல், புதிய ரேஷன் கடைகள் திறப்பு, ரேஷன் கடைகளில் தணிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
ரேஷன் கடைகள் மற்றும் கிடங்குகளை துறைசார்ந்த அலுவலர்கள் தணிக்கை செய்ய ஏதுவாக, பொது விநியோகத்திட்ட செல்போன் ஆய்வு செயலி உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்தச் செயலியை அமைச்சர் ப.வெங்கடரமணன் தொடங்கி வைத்தார். இந்த செயலி ரேஷன் கடைகள், கிடங்குகளில் தணிக்கைப் பணிகளை எளிதாக்கி, அவற்றை முறையாகக் கண்காணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.