புதுச்சேரியில் ஊதியம், பணி பாதுகாப்பு கோரி போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை

புதுச்சேரியில் ஊதியம், பணி பாதுகாப்பு கோரி போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார பேருந்து நடத்துநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால், இன்று பி.ஆர்.டி.சி.யின் மின்சார பேருந்து சேவை முடங்கியது.

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே 150-க்கும் மேற்பட்ட நடத்துநர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சொசைட்டி மூலம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது பற்றி அவர்கள் கூறியதாவது: தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.553 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது, மாத சம்பளம் 10-ம் தேதிக்குள் வழங்கப்படாமல், பல நேரங்களில் 15-ம் தேதிக்கு பிறகே தருகிறார்கள், அடிப்படை ஊதியம், பி.எப். பிடித்தம், பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தர வேலை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை உரிமைகளும் வழங்கப்படவில்லை.

இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண் நடத்துநர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் கூட இல்லை என்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 45-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றில் பணியாற்றும் நடத்துநர்களின் போராட்டத்தால் இன்று மின்சார பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஊதியம், பணி பாதுகாப்பு கோரி போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை
‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை: முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in