விநியோகஸ்தர் விருப்பத்துக்கு வேளாண் துறை செல்லலாமா? - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

உள்ளூர் ரக மக்காச்சோள விதைகளை வழங்க வலியுறுத்தல்
விநியோகஸ்தர் விருப்பத்துக்கு வேளாண் துறை செல்லலாமா? - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
Updated on
2 min read

சென்னை: விவசாயிகள் விரும்பும் மக்காச்சோள உள்ளூர் ரக விதைகளை, மானியத்தை உயர்த்தி தேவையான அளவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் துறையால் திணிக்கப்படும், விவசாயிகள் விரும்பாத மக்காச்சோள விதைகளால் மகசூல் பேரிழப்பு. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமாகி வருகிறது.

மக்காச்சோளம் என்பது கோழி உள்ளிட்ட கால்நடைகள் தீவனத்துக்கும், எத்தனால் தயாரிப்புக்கும் பெருமளவு தேவைப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இதன் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேளாண் துறையும், மகசூலை உயர்த்திட விவசாயிகளும் விரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி வேளாண் துறை உயரதிகாரிகள், வீரிய ரகம், அதிக மகசூல் எனக் கூறி கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து, அட்லாண்டா-752 எனும் வெளி மாநில புதிய மக்காச்சோள விதைகளை கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலான ஒப்பந்தம் செய்துகொண்ட ஒரே நபர் மூலம் தமிழ்நாட்டில் வேளாண் துறையின் மூலம் விற்பனை செய்யப்ப்பட்டு வருகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மூலம் இவ்விதைகளை கிலோ 100 ரூபாய் மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிக மகசூல் என வேளாண் துறை பிரச்சாரம் செய்த நிலையில் விவசாயிகள் அனைவரும் இந்த விதைகளை வாங்கி விதைத்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை என்பதுடன் கடந்த காலத்தில் விதைக்கப்பட்ட உள்ளூர் ரக விதைகளின் மகசூலில் 50 சதவீதம் மட்டுமே கிடைத்த சூழலில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தொடர்ந்து ஏற்படும் இழப்பால் பல விவசாயிகள், அரசு வழங்கும் மானியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தனியார் கடைகளிடம் வாங்கி விதைக்கலாம் என மாறி வருகின்றனர்.

ஆனாலும், தொடர்ந்து வேளாண் துறை வெளி மாநில விதைகளை வாங்கிட விவசாயிகளை நிர்பந்தித்து வருகிறது. ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவை. 4 கிலோவுக்கு 400 ரூபாய் அரசு மானியம் போக, ரூ.1,600 உடன் விவசாயிகள் செலுத்தி இவ்விதைகளை வாங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் பெரம்பலூர், சேலம், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

மாநிலம் அளவில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பாசனம் மற்றும் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனுடைய தேவை அதிகரிப்பில் சாகுபடி பரப்பு கூடுதலாகி வருகிறது. தமிழ்நாடு அளவில் கடந்த ஆட்சியிலும், நடப்பு ஆட்சியிலும் ஹில் என்ற ஒரே ஒப்பந்தகாரருக்கு டெண்டர் கொடுத்து, ஒவ்வொரு ஆண்டும் 1,000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் விற்பனைக்கு வருவதாக கூறப்படுகிறது.

2023-ல் இவ்விதைகளை வாங்கி விதைத்ததில் சோளக்கதிர்கள் வரவே இல்லை. 2024-ம் ஆண்டு விவசாயிகள் வாங்க மறுக்கவே, இது வேறு ரகம் எனக் கூறி விவசாயிகளின் தலையில் கட்டப்பட்டது. அது மிகக் குறைவான மகசூல் கொடுத்துள்ளது.

முளைப்பு திறனும் 20 சதம் இல்லை. 2025ம் ஆண்டு இதே எதிர்ப்பு இருந்தும் தற்போதும் இது வேளாண் டெப்போவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதர ஊட்டச்சத்து பொருட்கள் வேண்டுமென்றால் இதை வாங்கியாக வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தனியார் விதை விற்பனை கடைகளில் ஒரு ஏக்கருக்கான விதைகள் ரூ.3,000. கூடுதலாக இருந்தாலும் நாங்கள் அதை வாங்கி விதைக்கிறோம். ஏனெனில் இது ஒரு ஏக்கருக்கு 30 முதல் 35 மூட்டைகள் மகசூல் கிடைக்கும். வேளாண் துறை வழங்கும் விதைகள் மூலம் 20 மூட்டைகள் கூட கிடைக்காது, என விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் நடப்பு பருவத்திற்கான விதைகளை கோவை மாவட்டத்தில் இருந்து லாரிகளில் சேலம் மாவட்ட கிடங்குகளில் இறக்கி வைக்க வந்தபோது, பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய வட்டார கிடங்குகளில் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் தனியார் விற்பனை கடைகளின் விதைகளை வாங்கி விதைக்கிறோம், வேளாண் துறையினர் பார்வையிட்ட பின், கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் அரசு பின்னேற்பு மானியமாக கொடுத்தால் போதும் என்று விவசாயிகள் வற்புறுத்தியும் வேளாண் துறை மறுத்து, வேளாண் துறை கொடுக்கும் விதைகளை வாங்கினால் தான் மானியம் என்று வற்புறுத்துவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

டெண்டர் எடுத்தவரின் பங்கீட்டை ஈடு செய்ய, தரமற்ற விதைகள், முளைப்பு திறன் குறைந்த விதைகளை விவசாயிகள் பலர் வாங்காததால் கடந்த ஆண்டு ஒரு பகுதி விதை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. விற்பனை இல்லாமல் போனால், வேளாண்துறையின் கள அலுவலர்கள் தான் இதற்கான தொகையை செலுத்த வேண்டும். தமிழகத்தில் சுமார் 1,000 மெட்ரிக் டன் மேல் ஐந்து ரக விதைகள் ஒவ்வொரு ஆண்டும் இப்படி வருகிறது.

தமிழகத்தின் மண், நீர், மற்றும் சுற்றுச்சூழலுக்கு இவ்விதைகள் பொருத்தமில்லை. பராமரிப்பு செலவு கூடுதல் ஆகிறது. மண் விரும்பும் விதையைத் தான் விவசாயிகள் விரும்புவர், விநியோகஸ்தரின் விருப்பத்திற்கு வேளாண் துறை செல்லலாமா?

விதைகளை தேர்வு செய்யும் உரிமை, சுதந்திரம் விவசாயிகளுக்கே எதிர்வினையாற்றும் வேளாண் துறைக்கு அல்ல. வேளாண்துறை அமைச்சர் உடன் தலையிட்டு, விவசாயிகள் விரும்பும் மக்காச்சோள உள்ளூர் ரக விதைகளை, மானியத்தை உயர்த்தி தேவையான அளவு வழங்கிட அவசர நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

விநியோகஸ்தர் விருப்பத்துக்கு வேளாண் துறை செல்லலாமா? - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
புதுச்சேரியில் 38,000 ரேஷன் கார்டுகள் ரத்தா? - அமைச்சர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in