

சென்னை: இட ஒதுக்கீட்டுக்கான தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் ராதிகா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் மஞ்சுளா, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பரிமளா ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை எந்தவித நிபந்தனையும் இன்றி அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் தொடங்கிய நாள்முதல் முடியும் நாள்வரை தொடர்ச்சியாக எங்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும்.
நாளை (22-ம் தேதி) அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை போன்ற மசோதாக்கள் கூட்டத்தொடரில் வருகிறது என்பதை காரணம் காட்டி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை காலம் தாழ்த்தக் கூடாது என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும்.
இதன் ஒரு பகுதியாக மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.