

கோவை: இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு கோவையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 96.
கோவையில் வசித்து வந்தவர் கவிஞர் புவியரசு. இவரது மனைவி, மகன் இறந்துவிட்ட நிலையில், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஜூலை 1) காலை 9 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகிறது.
புவியரசு மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.சிவசாமி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் ப.பா.ரமணி மற்றும் எழுத்தாளர்கள், கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூர் கிராமத்தில் பிறந்தவர் புவியரசு.
பெற்றோர் வைத்த பெயர் ஜெகநாதன். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக, புவியரசு என தனது பெயரை மாற்றிக்கொண்டார். கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து 120 புத்தகங்களை எழுதி உள்ளார். வானம்பாடி இயக்கத்தில் மூத்த முன்னோடியாக இருந்தார். ஆங்கிலம், ரஷ்யன், மலையாளம், ஹிந்தி மொழி நூல்களை தமிழாக்கம் செய்துள்ளார். திரைப்படத் துறையிலும் கால் பதித்துள்ள புவியரசு கமலின் இலக்கிய நண்பர். இவர் எழுதிய ‘கையொப்பம்’ கவிதை தொகுப்புக்கும், ‘புரட்சிக்காரன்’ வங்க மொழிபெயர்ப்பு நூலுக்கும் 2 முறை சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்.