

சென்னை: தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் உதவியாளரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்புதல்களை பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.
இவ்வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கைஎடுக்கப்பட்டது. அவரது உறவினர்கள் ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, அன்பில் மகேஸ் தொடர்புடைய 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அன்பில் மகேஸிடம் போலீஸார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், அன்பில் மகேஸ் உதவியாளர் அருண் பிரகாஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் முழுமையாக வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டன. இந்த விசாரணை இரவு வரை நீடித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.