தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரிப்பு: அன்புமணி கண்டனம்

அன்புமணி | கோப்புப் படம்
அன்புமணி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளதற்கு, பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் பால் நிறுவனங்களில் ஒன்று, 3 சதவீத கொழுப்பு சத்து கொண்ட நீல உறை பாலின் விலையை லிட்டருக்கு ரூ.52-ல் இருந்து ரூ.62 ஆகவும், 4.5 சதவீத கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையை ரூ.63-ல் இருந்து ரூ.68 ஆகவும், 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை பாலின் விலையை ரூ.72-ல் இருந்து ரூ.76 ஆக உயர்த்தியிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் பால் விலைகள் உயர்த்தப்படுவது இது 8-வது முறை. ஆவினில் 3 சதவீத கொழுப்பு சத்துள்ள நீல உறை பால் லிட்டருக்கு ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்கள் ரூ.22 கூடுதலாக விற்பனை செய்கின்றன.

அதேபோல், பச்சை உறை பால் ஆவினில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தனியார் பால் விலை ரூ.24 கூடுதலாக ரூ.68-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 6 சதவீத கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு உறை ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.60 மட்டும் தான். ஆனால், அதே பாலை தனியார் நிறுவனங்கள் ரூ.76-க்கு விற்பனை செய்கின்றன.

அதன்படி, பால்களின் விலை ஆவின் நிறுவனத்தை விட தனியார் நிறுவனங்களில் 55 சதவீதம் அதிகமாக உள்ளது. இது பகல் கொள்ளையாகும். தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வெகுமதிக்காக திமுக அரசு இந்த இரக்கமற்ற பகல் கொள்ளையை கண்டும் காணாமல் இருக்கிறது. மக்களை சுரண்டும் தனியார் பால் நிறுவனங்களுக்கு துணை போவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் பேசி பால்விலை உயர்வை திரும்பப் பெற செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்புமணி | கோப்புப் படம்
வெற்றிக் கணக்கை தொடங்குமா நாம் தமிழர் கட்சி? - சீமான் வியூகமும், களச் சூழலும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in