திருச்சி: இலங்கையில் இருந்து தமிழகத்தை நெருங்கும் தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுடன், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கைக்கு தெற்கு பகுதியில் நீடித்த காற்று சுழற்சிகள் ஒன்றிணைந்து நேற்று தாழ்வுப் பகுதியாக உருவாகி அதே இடத்தில் நீடிக்கிறது.
ந.செல்வகுமார்
இன்று (நவ.26) தீவிர தாழ்வுப் பகுதியாகவும், மண்டலமாகவும் உருவாகி இலங்கையை கடந்து நாளை (நவ.27) இலங்கையின் வடக்குப் பகுதியில் இறங்கும். பாக் ஜலசந்தி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து டெல்டா மாவட்ட கரைகளையொட்டியே வட கடலோரம் நகரும்.
இதன் காரணமாக இலங்கை முழுவதும் வரும் 28-ம் தேதி வரை வரலாறு காணாத மழை பொழிந்து, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தும். நாளை தமிழகத்தின் தென் கடலோரம், டெல்டா கடலோரம் லேசான காற்றுடன் சாரல் மழைப்பொழிவு தொடங்கும்.
வரும் 28-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான தரைக்காற்றுடன் மழைப்பொழிவு தொடங்கும்.
படிப்படியாக மழைப்பொழிவு தீவிரமாகி வரும் 29, 30-ம் தேதிகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், திருச்சி கிழக்கு, பெரம்பலூர் கிழக்கு, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும்.
மேலும், வரும் 28 முதல் டிச.1-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரியில் தீவிர மழைப்பொழிவு இருக்கும். டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் வரை வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.