கனிமொழியை விமர்சித்த வழக்கு: ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை ரத்து

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

Updated on
1 min read

சென்னை: பெரியார் சிலை அகற்றப்படும் என்றும், திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பதியப்பட்ட வழக்கில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவரான ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக தமிழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரான ஹெச்.ராஜா கடந்த 2018 மார்ச் மாதம் சமூக வலைதளப் பதிவில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என பதிவிட்டிருந்தார்.

இதேபோல் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அதே ஆண்டு ஏப்ரல் மாதம் அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு போலீஸார் ஹெச். ராஜா மீது இரு வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை எம்பி, எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இதில் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, கே. ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பாஜக நிர்வாகி ஹெச்.ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் பதற்றம் ஏற்பட்டது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. சிறப்பு நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ளாமல் ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளிலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல’ என்று கூறி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

<div class="paragraphs"><p>ஹெச்.ராஜா</p></div>
கொடைக்கானல் விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு - ‘அவகோடா’ விவசாயிகள் மகிழ்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in