

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து கடந்த 2022 ஏப்.25-ம் தேதி சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இவற்றை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். சட்டப்பேரவையில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை கடந்த 2023-ல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
இதில், சென்னை பல்கலைக்கழக மசோதாவை கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த குடியரசுத் தலைவர், தற்போது தமிழக அரசுக்கு அதை திருப்பி அனுப்பியுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.