

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, அணையில் நீர்வளத்துறை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் விஜய் நாளை மறுநாள் (1-ம் தேதி) தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார். இதனிடையே, அணை திறப்புக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. அணையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர், சாலை மார்கமாக மேட்டூர் அணைக்கு வருகிறார். தொடர்ந்து, அணையிலிருந்து பாசனத்துக்கு முதல்வர் தண்ணீர் திறந்து வைக்கிறார். அணையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, முதல்வர் விஜய் வரும் வழிகளில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகள், மேட்டூர் நகரப்பகுதிகளில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக, அணையின் வலது கரையில் அமைந்துள்ள பவளவிழா கோபுரம் நுழைவு வாயில் பகுதியில் இருந்து அணை பூங்கா, ஒர்க்ஷாப், கோட்டாசியர் அலுவலகம், 3 ரோடு வழியாக 4 வரை இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி இன்று நடந்தன.
தொடர்ந்து, கட்சி சார்பில் முதல்வருக்கு மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், முதல்வர் வருகையின் காரணமாக, போக்குவரத்து மாற்றங்கள், வாகன நிறுத்தும் இடங்கள், காவல் கட்டுபாட்டு மையம் உள்ளிட்ட பணிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் வருகையின் காரணமாக, ஏடிஜிபி தலைமையில் ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள் உள்பட 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நீர்வளத்துறை செயலாளர் ஆய்வு
தமிழக முதல்வர் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வருவதை முன்னிட்டு, நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் எம்.வடநேரே நிகழ்ச்சி நடக்கும் இடம், தண்ணீர் திறக்கும் இடம் ஆகியவற்றை இன்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். பின்னர், முதல்வர் ஆய்வு மேற்கொள்ளும் இடங்களை பார்வையிட்டார்.
மேலும் அணைக்கான நீர்வரத்து, நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயக்குமாரி, நீர்வளத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் கோட்டாசியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு:
அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 6,887 கன அடியாக இருந்த நிலையில், மாலை விநாடிக்கு 9,035 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 90.47 அடியாகவும், நீர் இருப்பு 53.19 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.