சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழை அறிவிப்பால் 4 மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழை அறிவிப்பால் 4 மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரம்
Updated on
2 min read

சென்னை: டிட்வா புயல் வலு குறைந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையை டிட்வா புயல் புரட்டிப் போட்ட நிலையில் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இது சென்னையை நெருங்கிய நிலையில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தபோது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பிடும்படியாக மழை இல்லை.

நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடித்து, நேற்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எதிர்பாராத மழை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காத நிலையில், குழந்தைகளும், பெற்றோரும், பள்ளிகளுக்கு நேற்று நனைந்தபடி சென்றனர். மாலை வீடு திரும்பும்போதும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், குழந்தைகள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே, காலை முதலே விடாமல் மழை பெய்ததால், சென்னையில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு சந்தையை ஒட்டியுள்ள மெட்ரோ வழித்தட சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகள், சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலை, ரிப்பன் மாளிகையை ஒட்டி உள்ள ராஜா முத்தையா சாலை, பெரம்பூர் ஜிகேஎம் காலனி செல்லும் சாலை, புளியந்தோப்பு - பட்டாளம் பகுதி, தரமணி எம்ஜிஆர் சாலை, புறநகர் பகுதிகளான ஆவடி சென்னீர் குப்பம் சாலை, வேலப்பன் சாவடி சாலை என பல்வேறு பிரதான சாலைகளிலும் அதிக அளவில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அதிகபட்சமாக சென்னை புழலில் 12 செ.மீ., எண்ணூர் துறைமுகத்தில் 10 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ., வில்லிவாக்கத்தில் 7 செ.மீ., பள்ளிக்கரணை, கிண்டியில் 6 செ.மீ. மழை பதிவானது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் (கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும்) தள்ளிவைக்கப்படுகிறது.

இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில், நிவாரணப் பணிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து புரசைவாக்கம் தாணா தெருவில் மழைநீர் தேக்க பாதிப்புகளையும், மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார். அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையே, வடசென்னை வியாசர்பாடி, கணேசபுரம் சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதை பார்வையிட வந்த மாநகராட்சி துணை ஆணையரிடம், ‘‘மழை நீர் வடிந்து செல்ல என்னதான் வேலை செய்தீர்கள்?’’ என்று கேட்டு மக்கள் வாக்குவாதம் செய்தனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தங்குவோருக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மக்கள் தங்காவிட்டாலும், மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நேற்று 83,600 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 77 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. 103 படகுகளை மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையை சார்ந்த 300 பேர், மாநில பேரிடர் மீட்புப் படையை சார்ந்த 50 பேர் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்தார்.

திருவள்ளூர், செங்கை, காஞ்சி மாவட்டங்களிலும் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழை அறிவிப்பால் 4 மாவட்டங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரம்
எஸ்ஐஆர் விவகாரத்தைக் கிளப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in