‘காவல் மரணம், விலைவாசி, மின்கட்டண உயர்வு’ - தவெக அரசுக்கு பிரேமலதா கண்டனம்

பிரேமலதா | கோப்புப் படம் 

பிரேமலதா | கோப்புப் படம் 

Updated on
1 min read

கடலூர்: “இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ, ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு எப்படி இருக்கிறது என மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தொகுதிக்குச் சென்று ஆய்வு செய்கிறோம்; அதிகாரிகளிடம் பேசுகிறோம். ஒரு டெண்டரும் விடப்படவில்லை; எந்தவொரு அடிப்படை வேலைகளையும் ஆரம்பிக்கவில்லை. இது சீன் பண்ணுவதற்கோ, போட்டோ ஷீட் எடுப்பதற்கோ, ரீல்ஸ் போடவோ சினிமா கிடையாது. பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. அதை தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரிசி விலை அதிகரித்துள்ளது; நேற்று மட்டும் ஒரு டன் அரசி ரூ.15 ஆயிரம் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு குறித்து அரசுதான் சிந்திக்க வேண்டும். சும்மா சினிமா பாத்துக்கொண்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுவிட்டு, சீன் போடுவது கிடையாது. இவை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை.

எல்.நினோ பிரச்சினையால் தமிழகம் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள்தான் பஞ்சம், வறட்சி, விலைவாசி உயர்வு ஆகியவை இல்லாமல் மக்களை பாதுகாக்க வேண்டும்.

தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது. இவை தடுக்கப்பட வேண்டும். எந்த காவல்துறைக்கும் ஒருவரை அடித்துக் கொல்லும் உரிமை எந்தச் சட்டத்திலும் கிடையாது. ஒருவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றால், விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். தவறு இருப்பின் நீதிமன்றம் தண்டனை வழங்கும்.

காவல் மரணம் தொடரக் கூடாது. மக்கள் விரும்புவதை தான் சட்டங்களாகக் கொண்டுவர வேண்டும். நீட்தேர்வை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்க்கையில், அதை நீக்கிவிட வேண்டும். மக்களுக்காக தான் சட்டங்களும், திட்டங்களும். மக்களின் கோரிக்கையை தான் அரசுகள் கேட்க வேண்டும்.

நாங்கள் மக்கள் பக்கம் தான் இருப்போம். தமிழகத்தில் மின்வெட்டு நிலவுகிறது, மின்கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாற்றமும் பார்க்க முடியவில்லை; அதே கண்துடைப்பு தான் நிகழ்கிறது. இது சினிமா கிடையாது. ரீல் ஹீரோ ரியல் ஹீரோ ஆக வேண்டும் என்றால் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பிரேமலதா | கோப்புப் படம்&nbsp;</p></div>
“மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்க வேண்டும்” - அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in