

சென்னை: மீனவர்களின் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்கு வெளியே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கடன் உதவி வழங்க வேண்டும்.
கால்நடைகளுக்குத் தேவையான கம்பு நேப்பியர், ரெட் நேப்பியர் உள்ளிட்ட பசுந்தாள் தீவனங்களை அரசு வழங்க வேண்டும். தீவன உற்பத்தி குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கத் தடுப்பூசிகளும், மருந்துகளும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு வழங்கும் இலவச ஆடு, மாடு திட்டங்களில் பயனாளிகள் தேர்வு முறையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை மீட்டெடுப்பது ஒன்றே வழி. கடலில் ரசாயனம் மற்றும் எண்ணெய் கலப்பதைத் தடுத்து, மீன் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மீன்பிடித் தடைக்காலம் மற்றும் புயல் காலங்களில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும்.
மீனவப் பெண்களுக்குச் சுய உதவிக்குழுக்கள் மூலம் மாற்று வருமானத்துக்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். ஆவின் பால் பதப்படுத்தும் குளிரூட்டும் நிலையத்தை வேப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள கால்நடை ஆய்வாளர் மற்றும் மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கால்நடைகள் சாலைகளில் திரிவதைத் தவிர்க்க, ஒவ்வொரு பகுதியிலும் மேய்ச்சலுக்கென்று தனி நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், நாட்டு மாடு வளர்ப்பவர்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும்.
பீட்டா அமைப்புக்கு எதிராகப் போராடி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததில் விஜயகாந்துக்கும் தேமுதிகவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. காங்கேயம், புலிக்குளம் போன்ற நாட்டு இன மாடுகளைப் பாதுகாக்க வேண்டும். மாநிலம் கடனில் இருக்கும்போது, முதல்வர் தனி விமானத்தில் செல்வதற்குச் செலவிடும் பணத்தை விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், நீர்நிலைகளைத் தூர்வாரவும் பயன்படுத்தலாம்.